அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. வெற்றியை நெருங்கும் டொனால்டு டிரம்ப்!

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் 248 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை உள்ளார்.

வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர்கள் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.

அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.  

இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதேபோல், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 248 எலெக்ட்ரோல் வாக்குகளை (27 மாகாணங்களில் வெற்றி) பெற்று முன்னிலை உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை (19 மாகாணங்களில் வெற்றி) பெற்றுள்ளார்.