அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு! ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா ஜோ பைடன்?

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தற்போது அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர், ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோ பைடன், இந்தியா வரவுள்ள நிலையில், ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.