அமெரிக்காவில் ராணுவ வீராங்கனை தற்கொலை.. மகள் பிறந்தநாளை கொண்டாடிய சிலநாட்களில் விபரீத முடிவு!

 

அமெரிக்காவில் ராணுவ வீராங்கனை ஒருவர், தனது மகளின் பிறந்த நாள் முடிந்த சில நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (34). ஆப்கானிஸ்தானில் இருமுறை பணியாற்றிய மிச்சேல் யங்க், 2021-ம் ஆண்டில் தனது ராணுவ ஒப்பந்தத்தை 20 ஆண்டுகள் பணியாற்ற நீட்டித்தார். இவர், தனது ஓய்வு நேரங்களில் உள்ளூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொண்டாற்றியிருந்தார்.

அதேசமயம் இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். மிச்சேலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவருக்கு கிரேசி (12) என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தனது மகள் கிரேசி பிறந்தநாள் தொடர்பாக மிச்சேல் யங்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “எனக்கு தெரிந்த மிகவும் இனிமையான மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் kiddo. என் வாழ்க்கையின் சிறந்த பகுதி உங்கள் அம்மாவாக இருப்பதுதான்” என உருக்கமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் மிச்சேல் யங்க் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மிச்சேல் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மிச்சேல் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.