பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்!

 

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.  உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் வந்த நபர் ஒருவர், வீடியோ எடுப்பதற்கான கேமிரா ஒன்றை தரையில் வைத்துள்ளார். அதன்பின்னர், அடையாளம் தெரியாத திரவம் ஒன்றை வெளியே எடுத்து, அவர் மேல் ஊற்றி கொண்டார். பின்னர் அதனை பற்ற வைத்து விட்டு, பாலஸ்தீனர்களை விடுவியுங்கள். இனப்படுகொலையில் ஒருபோதும் நான் பங்கு வகிக்கமாட்டேன் என அலறியபடியே சரிந்து விழுந்துள்ளார்.

இதனை அமெரிக்க விமான படையின் செய்தி தொடர்பாளர் ரோஸ் ரைலியும் உறுதி செய்துள்ளார்.  உடனடியாக அந்நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருடைய நிலைமை கவலைக்குரிய வகையிலேயே உள்ளது. இதில், தூதரக பணியாளர் யாருக்கும் பாதிப்பில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.