மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 

அமெரிக்காவில் மில்க் ஷேக்கை ஆர்டர் செய்த ஒருவருக்கு, தவறுதலாக சிறுநீர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர் வூட்ஸ். இவர், அங்குள்ள பிரபலமான ஓர் உணவு டெலிவரி செயலி மூலம் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய டெலிவரி மேனும் மில்க் ஷேக்ஐ கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மில்க் ஷேக்கினை ஸ்ட்ரா பயன்படுத்தி, வூட்ஸ் சிறிதளவு பருகியபோது, அதன் சுவை வித்தியாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

பின்னர், தான் குடித்தது மில்க் ஷேக் அல்ல, சிறுநீர் என்பதைப் புரிந்து கொண்டார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற வூட்ஸ், டெலிவரி செய்த நபரை வீட்டுக்கு அழைத்து, நடந்தது குறித்து சற்று கோபமாகவே விவரித்துள்ளார். 

தனது தவறை ஒப்புக்கொண்ட டெலிவரி மேன், ‘தாம் நீண்டநேரமாக டெலிவரி வேலையைச் செய்து வந்ததால், ரெஸ்ட் ரூம் செல்ல இயலவில்லை. ஆகவே, ஒரு காலியான கப்பில் சிறுநீர் கழித்திருந்தேன். தவறுதலாக, கோப்பையை மாற்றி டெலிவரி செய்துவிட்டேன்’ எனச் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆனால் கொஞ்சமும் கோபம் தணியாத வூட்ஸ், உணவு டெலிவரி நிறுவனத்துக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். உணவு டெலிவரி நிறுவனம், தவறை ஏற்று உணவுக்கான பணத்தில் $18ஐ கொடுத்துள்ளது. மேலும், தவறு செய்த டெலிவரி மேனையும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இதுபோன்ற தவறுகளை எங்கள் நிறுவனம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என உணவு டெலிவரி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.