டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயம்... டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்றபோது விபரீதம்! 5 பேர் நிலை என்ன?

 

அட்லாண்டிக் கடலில் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் டைட்டன் கடலில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இங்கிலாந்தில் இருந்து 2,200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. பனிப்பாறை மீது மோதிய டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளை, சுற்றுலா பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று டைட்டனிக் கப்பலின் சிதைந்த பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து கடந்த 16-ம் தேதி டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்றது. இந்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் உள்பட 5 பேர் பயணித்தனர்.

கடைசியாக கடந்த 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் நீர்மூழ்கி கப்பல் பயணித்தபோது ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கனடா, அமெரிக்க கடற்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் உள்ள நிலையில் கப்பல் புறப்பட்டு ஏற்கனவே 32 மணி நேரம் ஆகிவிட்டது. கப்பலில் இன்னும் 64 மணி நேரம் ஆக்சிஜன் விநியோகம் எஞ்சியுள்ளது.

நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களின் நிலை என்ன? என்று இதுவரை தெரியவில்லை. இதனால், மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அட்லாண்டிக் கடலில் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் டைட்டன் கடலில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.