பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சம்பவம்!

 

அமெரிக்காவில் நெவாடா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அந்த மர்ம நபர் அங்கு இருப்பதை அறிந்து அவரை சுட்டு வீழ்த்தினர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறியபோது, “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். அங்கு 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தேன்” என்றார்.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களை நேற்று முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் போன்று கடந்த 2017-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.