விருந்து நிகழச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்

 

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மே தினத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஸ்டாக்டன் நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். 

அப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். 

அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டதிலும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 18 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி அதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.