திருக்குறள் 3.0 தந்த தமிழ்க்காரிக்கு பாராட்டு விழா! அமெரிக்கத் தமிழர்கள் பெருமிதம்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக எழுதப்பட்ட திருக்குறளுக்கு முழுமையான உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர் எழுத்தாளர் தமிழ்க்காரிக்கு அமெரிக்காவில் பாராட்டுவிழா நடைபெற்றது. பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த அமெரிக்கத் தமிழர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்க்காரி என அறியப்படும் முனைவர் சித்ரா மகேஷ் வசித்து வரும் டல்லாஸ் நகரில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பங்கேற்றுப் பேசிய புரவலர் பால்பாண்டியன்,பரிமேலழகர் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளாக திருக்குறளுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் விளக்கம் எழுதி வருகின்றனர். தமிழ்க்காரி விளக்க உரையுடன் கவிதை உரையும் படைத்து நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர்கள் வேலுராமன் மற்றும் விசாலாட்சி வேலு பேசும் போது, “ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் பெற்றோராக, ஆசிரியராக டல்லாஸில் தமிழ்ப் பணியைத் தொடங்கிய முனைவர் சித்ரா மகேஷ்,  1330 குறள்களையும் சொல்லி குறளரசி பட்டம் பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி. சித்ரா மற்றவர்களுக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார். இன்று திருக்குறள் புத்தகம் எழுதியிருப்பது மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தனர்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் திருக்குறள் எழுதத் தொடங்குவார். அது இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என இப்போது தான் உணர்ந்தேன் என்று சித்ராவின் கணவர் மகேஷ் குறிப்பிட்டார். மகேஷின் தந்தை கல்வியாளர் ஜலத்தூர் கிருஷ்ணசாமி, தொலைபேசியில் கவிதை மழை பொழிந்து வாழ்த்து தெரிவித்தார்

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் கல்விக்கழகத்தின்  தலைவர்  தமிழ்மணி பேசும் போது திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர் என்று குறிப்பிட்டு வாழ்த்தியதுடன், முதன் முறையாக கவிதை வடிவத்தில் விளக்கம் எழுதியதும் தமிழ்க்காரி தான் என்பதையும் குறிப்பிட்டு, வாழ்த்துப்பா படைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த பேராசிரியர் கு.ஞானசம்மந்தம் கவிதை வடிவில் விளக்கம் எழுதியுள்ள தமிழ்க்காரியைப் பாராட்டிப் பேசியிருந்தார். AI தொழில்நுட்பத்தில் மிகச்சிறப்பான வடிவாக்கத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளதாகவும் பாராட்டினார்.

அமெரிக்காவின் முதல் குறளரசன் செந்தில் துரைசாமி பேசும் போது, ஒவ்வொரு அதிகாரத்திற்கான விளக்கத்துடன், மூன்று வரிகளில் குறுங்கவிதை வடிவில் ஒவ்வொரு குறள்களுக்கும் தமிழ்க்காரி படைத்துள்ள இந்த புத்தகம் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தொழிலதிபர் செந்தில்குமார், திருக்குறள் புத்தகம் எழுதுவது மிகப்பெரியத் திட்டமாகும். இத்தகைய திட்டத்திற்கு நிறைய முன் தயாரிப்பு பணிகள், உழைப்பு, சரிபார்ப்பு தேவை. சித்ரா மகேஷின் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள் என்றார்.

மகாகவி ஈரோடு தமிழன்பன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், திருக்குறளுக்காக சித்ரா விளக்கம் எழுதி குறுங்கவிதைகளும்  எழுதியுள்ளது மிகப்பெரிய ஆராய்ச்சிப் பணியாகும்  என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் முருகானந்தன் பேசும் போது, நம் தமிழ் இனத்தின் தேசியப் புத்தகமாக இருக்கும் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு முழுமையான உரை எழுதிய முதல் பெண் உரையாசிரியர் என்ற பெருமை படைத்துள்ள சித்ரா, நம்முடைய டல்லாஸ் தமிழர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

தொழிலதிபர் ஸ்ரீனிவாசன், அமெரிக்காவிலிருந்து கொண்டு இத்தகைய பெரும் சாதனையை படைத்துள்ளார். அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையான உரை எழுதியுள்ளது முக்கியமானதாகும், மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

”திருக்குறள் தான் தமிழர்களின் தத்துவம்.  திருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது வாழ்க்கையிலேயே சிறப்பான ஒன்று. திருக்குறள் உரைக்கு சில லிட்மஸ் சோதனை இருக்கு. அதில் ஒன்று 134 வது குறள். அதில் தமிழ்க்காரி தேர்ச்சி பெற்று விட்டார். இன்னொன்னு 55 வது குறள்,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப்
பெய்யும் மழை

அதுலயும் பாஸ் பண்ணிட்டாங்க. இந்த மாதிரி நல்லா உரை எழுதினால் தான் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்”, என்று டல்லாஸ், யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். லஷ்மண் தமிழ் பாராட்டிப் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் டாக்டர்.பாலா சுவாமிநாதன் அனுப்பியுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், எளிய உரையுடனும் குறுங்கவிதைகளுடனும் தமிழ்க்காரி எழுதியுள்ள திருக்குறள் 3.0 புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பழனியிலிருந்து வந்திருந்த, ஓய்வுபெற்ற பொறியியல் பேராசிரியர்  ராமசுப்பு கூறும் போது கவிதை எழுதுவது என்பது சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்று கிடைக்கும் திறமையாகும். 1330 திருக்குறளுக்கும் மூன்று வரிகளில் கவிதை வடிவில் உரை எழுதியிருப்பது சாதாரணமான ஒன்றல்ல. திருக்குறள் விளக்கத்துடன் தமிழ்க்காரியின் கவித்திறனும் இந்தப் புத்தகத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும் என்று குறிப்பிட்டார்.

சித்ரா மகேஷின் நெருங்கிய தோழியான லஷ்மி தமிழ்மணி  தன்னுடைய தோழியின் சாதனையை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். குழந்தைகளுக்குப் புரியும் வகையில் மிகவும் எளிமையாக எழுதியிருக்கிறார். என்னுடைய 2 வயது பேரனுக்கு திருக்குறள் 3.0 புத்தகத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இதைப் போன்று சங்க இலக்கிய நூல்கள் அனைத்தையும்  எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக சித்ரா எழுத வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் லஷ்மி.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்கள்  நல வாரியத்தின் உறுப்பினருமான கால்டுவெல் வேள்நம்பி தமிழ்க்காரியின் சாதனையைப் பாராட்டி, மூன்று தலைமுறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருக்குறள் 3.0 புத்தகம் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்

ஏற்புரை ஆற்றிய தமிழ்க்காரி என்ற முனைவர் சித்ரா மகேஷ், பள்ளிக்கூடக் காலத்திலேயே திருமண ஏற்பாடு நடைபெற்றதாகவும் அதைத் தடுத்து நிறுத்தி, கல்லூரிக்கு அனுப்பிய தன்னுடைய தாயாரால் தான் இந்த மேடை வரை வந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். அமெரிக்கா வந்தது முதல் தமிழ்ப்பள்ளியில் பெற்றோராக, ஆசிரியராக, திருக்குறள் போட்டியில் பங்கேற்று 1330 குறள்களையும் சொல்லியது, தமிழ் விழாக்களில் கவிதைகள் வாசித்தது, தமிழ்ச்சங்கப் பணிகள், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை பணிகள், 30 குறுந்தொகைகள் கொண்ட பூக்கள் பூக்கும் தருணம் புத்தகம், கபிலரின் குறிஞ்சிப்பாட்டு நூலுக்கு காதல் கதை சொல்லட்டுமா புத்தகம், திருக்குறள் 3.0 புத்தகம் என அடுத்தடுத்து கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து உடன் பயணித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

இந்த நிகழ்வில் டல்லாஸ் நகரில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு பணிகளை புஷ்பா கால்டுவெல், தமிழ்மணி, லஷ்மி தமிழ்மணி, கீர்த்தி ஜெயராஜ், சக்திகுமார் செய்திருந்தனர்.