மின்னல் தாக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பெண்.. அமெரிக்காவில் அதிசய நிகழ்வு!

 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நாயை வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லும் போது மின்னல் தாக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் ஆரஞ்சு கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரெபெக்கா சோட்டோ. இவர் கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக கிளம்பிக் கொண்டிருந்த போது மழை பெய்வது போல் இருந்துள்ளது. இதனால் மழை வருவதற்கு முன்பு, தனது நாயை சிறுது தூரம் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்ல நினைத்த ரெபெக்கா, வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அடுத்த நிமிடமே அவரை மின்னல் தாக்கியுள்ளது.

பலமான சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது கணவர் லாரோ, ரெபெக்கா கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் அவரது நாயும் இருந்திருக்கிறது. பல இடங்களில் தீக்காயமும் உடலின் உள் பாகங்களில் காயங்கள் ஏற்படிருந்ததாலும் மருத்துவர்கள் இவரது உயிரை எப்படியோ காப்பாற்றிவிட்டனர். தற்போது மின்னல் தாக்கி ஒரு மாதம் கடந்த பிறகு, தனக்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் அதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் காயம் எல்லாம் ஓரளவிற்கு குணமாகிவிட்டது. உண்மையைச் சொல்லப் போனால் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. இறந்துவிட்டேன் என்றுதான் நினைத்தேன். மின்னல் தாக்கிய போது அவ்வுளவு கணமாக இருந்தது. எனக்கு நேர்ந்த சம்பவத்தின் புகைப்படங்களை பார்த்த போதும், அதுகுறித்து கூறப்பட்ட செய்திகளையும், கதைகளையும் தெரிந்து கொண்ட போது, உண்மையில் நான் அதிர்ஷ்டசாலிதான். ஆனால் மின்னல் விழுந்த அதிர்ச்சியில் இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருவதாக கூறுகிறார் ரெபக்கா.

இவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது, இதயத்துடிப்பு எதுவும் இல்லாமலேயே இருந்துள்ளார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்துள்ளனர். ஆனால் மருத்துவ குழுவினரின் விரைவான சிகிச்சையால் இன்று உயிர் பிழைத்துள்ளார். தற்போது தனது வழக்கமான பணிகளை செய்து வரும் ரெபெக்கா, நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி செல்வதை நிறுத்தவில்லை. ஆனால் மழை வருவது போல் இருந்தாலோ அல்லது லேசாக இடி முழங்கும் சப்தம் கேட்டால் கூட வீட்டை வீட்டு வெளியே செல்வதை தவிர்க்கிறார்.

ரெபக்காவை குணப்படுத்த மருத்துவமனையில் நிறைய செலவாகி வருவதால், தற்போது இருவரும் கடுமையாக நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவமணை இவர்களது காப்பீடு வரம்பிற்குள் இல்லை என்பதாலும் இன்னும் பல தெரபிகள் அவருக்கு தேவைப்படுவதாலும் அதிக தொகை செலவாவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இவர்களது நிதிச் சுமையை குறைக்கவும் அதிகரிக்கும் மருத்துவ செலவிற்கு நிதி திரட்டவும் GoFundMe தளத்தில் பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிகிச்சைக்கு தேவைப்படும் 60,000 டாலர் தொகையை திரட்ட முடிவு செய்துள்ளார்கள். இதுவரையில் 37,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம்) திரட்டப்பட்டுள்ளது.