சகோதரனை திருமணம் செய்த பெண்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் காதல் கதை!

 

அமெரிக்காவில் தனக்கு சகோதரர் முறை கொண்டவரை திருமணம் செய்து, 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசிக்கும் கதையை பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த லிண்ட்சே, அவரின் கணவர் கேட்டை 2007-ம் ஆண்டு முதலில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு வயது 14 மற்றும் 16 ஆக இருந்தது. லிண்ட்சே தனது தாயுடன் அப்போது வசித்து வந்துள்ளார். அவரின் வீட்டிற்கு இரவில் கேட்டை அழைத்து சந்தித்து வந்துள்ளார். ஒருநாள் இருவரும் அறையில் இருப்பதை பார்த்த லிண்ட்சேவின் தாய், கேட்டின் அப்பாவை சந்தித்து பேசி இருவரையும் பிரித்து வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகள் இருவரும் சந்திக்காத நிலையில், ஒரு நாள் கேட் ஃபேஸ்புக் மூலமாக லிண்ட்சேவிற்கு மெசேஜ் அனுப்பினார். அப்போது முதல் மீண்டும் பேசத்தொடங்கிய இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் இருவரின் காதலை அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. கேட், தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில், லிண்ட்சேவிற்கு விமானப்படையில் வேலை கிடைக்க, அவர் கேட்டை விட்டு தூரமாக சென்று விட்டார். கேட்டின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களினால் அவர் ஒரு வருடத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் இருவரின் காதல் அதிகரித்தாக அந்த பெண் கூறியுள்ளார். சிறையில் இருக்கும் கேட்டை பார்ப்பதற்கு லிண்ட்சே வந்துள்ளார். இருவருக்கும் இடையில் எதிர்ப்புகளை கடந்து காதல் அதிகரித்தது. கேட் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, இவர்களை பிரிப்பதற்காக சந்தித்து பேசிக்கொண்ட பெற்றோர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. லிண்ட்சேவிற்கு திருமணமாகி 4 வருடங்கள் கழித்து இருவரின் பெற்றோர்களும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அந்த வகையில், லிண்ட்சேவின் கணவர் அவருக்கு சகோதரர் முறைக்கு வருகிறார்.

ஆனால், அவர்களுக்கு முன்பே இந்த இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளனர். உறவு முறையில் குழப்பங்கள் இருப்பினும், அது அவர்களை பாதிக்கவில்லை எனவும், குடும்பமாக அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களின் காதல் கதை சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.