பகீர் வீடியோ.. விமானம் மீது விமானம் மோதல்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு!
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்துடன் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியபடி விமானம் சிறிது தூரம் ஓடுபாதையில் சென்று, அதன்பின் நின்றுவிட்டது. அதேசமயம் கடலோர காவல் படையின் விமானமும் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என அனைவரும் மீட்கப்பட்டதாக என்எச்கே தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹனேடா விமான நிலையத்தின் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர், விபத்து குறித்தான விவரங்களை சரிபார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் இது மாதிரியான மோதல் சம்பவத்தை நான் பார்த்ததில்லை என விமான ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.