எகிப்து கடற்கரையில் தந்தை கண் முன்னே மகனை கடித்துக் கொன்ற சுறா மீன்.. அதிர்ச்சி வீடியோ!
எகிப்தில் உள்ள செங்கடல் கடற்கரையில் தந்தை கண் முன்னே சுறா மீன் தாக்கி மகன் உயிரிழந்தது சுற்றுலா பயணிகளை அதிர வைத்துள்ளது.
எகிப்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹுர்காடா கடற்கரை நகரம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இப்பகுதி கடலில் அதிகளவில் சுறா மீன் தென்பட்டாலும், கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் த்ரில்லாக குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், எகிப்தில் வசித்து வரும் பூர்வீக ரஷ்யரான விளாடிமிர் போபோவ் (23), தனது தந்தை மற்றும் தோழியுடன் செங்கடல் கடற்கரைக்கு வந்துள்ளார். அங்குள்ள செங்கடலில் தனது தோழியுடன் விளாடிமிர் போபோவ் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சுறா மீன் வந்து அவர்களை தாக்கியது.
இதில் விளாடிமிர் போபோவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சுறா மீன் தாக்குதலில் சிக்கிய விளாடிமிர், ‘அப்பா காப்பாற்று’ என கத்தியதை கண்டு அதிர்ச்சியில் உறைந்ததாக அவரது தந்தை போபோவ் தெரிவித்துள்ளார். சுறா மீன் தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பகுதியில் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சுறா பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.