கருக்கலைப்பு உரிமை சட்டமானது.. பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரான்சில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்திலும் ஆணுக்கு நிகரான சம உரிமையைக் கேட்கும் பெண்கள் மகப்பேறு தொடர்பான விவகாரங்களில் தனி உரிமையைக் கோருவது நியாயமானதே. காரணம், கருவுறுதலுக்குப் பிந்தைய சிக்கல்கள் அனைத்தையும் பெண் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல், மனரீதியான வாதைகளும் சமூக அழுத்தமும் பெண்ணுக்கு மட்டுமே. ஆண் மிக எளிதாகக் கடந்துவந்துவிடுகிற நிகழ்வைப் பெண்கள் பெரும்பாடுபட்டும்கூடக் கடந்துவிட முடிவதில்லை.
பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசமைப்பின் பிரிவு 38-ல் திருத்தம் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தின் தேசிய பேரவை, செனட் அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிராக 72 உறுப்பினர்கள் வாக்களித்து இருந்தனர். மசோதா நிறைவேற்றத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் திரளான மக்கள் மசோதாவிற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதில் பெண்களும் இருந்தனர். உற்சாக மிகுதியில் பாடல் பாடியும் கவனம் ஈர்த்தனர்.
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.