குலுங்கிய விமானம்.. நடுவானில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்.. வைரல் வீடியோ!

 

ஸ்பெயினில் இருந்து உருகுவே சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் 30 பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் மேட்ரிட்டில் இருந்து உருகுவேவின் மோன்ட்விடியோ நகரை நோக்கி UX045 என்ற ஏர் யூரோப்பா விமானம் சென்று கொண்டிருந்த‌து. பிரேசில் நேரப்படி அதிகாலை 2.32 மணியளவில் பிரேசில் மேல் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் குலுங்கியது. அப்போது, சீட் பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். 

பயணி ஒருவர், பெட்டிகள் வைக்கும் இடத்திற்குள் பகுதிக்குள் பாய்ந்தார். அவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர். விமானத்தின் மேல் பகுதி, இருக்கைகள் சேதமடைந்த நிலையில், 30 பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக பிரேசிலுக்கு விமானம் திருப்ப‌ப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து ஏர் யூரோபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருகுவேவின் மோன்ட்விடியோவிற்குச் செல்லும் எங்கள் விமானம் கடுமையாக குலுங்கியதால் நடால் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. விமானம் சாதாரணமாக தரையிறங்கியது மற்றும் இதில் காயம் அடைந்தவர்களுக்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.