நடுவானில் தீ பிடித்து எரிந்தபடியே பறந்த விமானம்.. வைரலாகும் வீடியோ

 

அமெரிக்காவில் நடுவானில் தீ பிடித்து எரிந்தபடி விமானம் ஒன்று பறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.46 மணியளவில் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான அட்லஸ் ஏர் விமானம் 95 என்ற சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம்  தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த விமானம்  பியூர்டோ ரிக்கோவில் உள்ள  சான் ஜுவான் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

விமானப் பயண கண்காணிப்பு இணையதளமான ஏர்லைவ் அறிக்கையின்படி, நேற்று இரவு மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அட்லஸ் ஏர்லைன்ஸின் போயிங் 747-8 விமானத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அது சுமார் 11,000 அடி உயரத்தில் இருந்தது. இதற்கிடையில், அதன் வாழ் பகுதியிலிருந்து (tail unit) தீப்பொறிகள் வெளிவருவது தெரிந்தது. இருட்டாக இருந்ததால் தெளிவாக தெரிந்தது.

இதை விமான நிலைய ஊழியர்களும் பார்த்தனர். விமானியும் நிலைமையை உணர்ந்திருந்தார். இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கும், விமானிக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்று உடனடியாக தரையிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்து உயரத்தை குறைத்தவுடன் தீப்பொறிகள் குறைந்து காணப்பட்டது. அவசர தரையிறக்கத்தில் அதிக ஆபத்து ஏற்படாததற்கு இதுவே காரணம்.