அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2,69,000 ஆக உயர்வு!!

 

அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

இந்திய மாணவர்கள் இப்போது உலகம் முழுவதும் 240 நாடுகளில் படிக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்ய சபாவில் தெரிவித்தது. கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மாணவர்களின் விருப்பமான சிறந்த தேர்வுகளாக உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2.69 லட்சமாக அதிகரித்துள்ளது. சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியர்கள்தான்.

அமெரிக்காவில் தற்போது 2.90 லட்சம் சீன மாணவர்கள் படித்த போதிலும், 3 ஆண்டுகளில் சீன மாணவர் எண்ணிக்கை சரிந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்று நேரத்தில் குறைந்திருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022-23-ல் 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பல நாடுகளை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் போன்ற கல்வியை பயில்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 30,000 மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.