கல்லூரி ரகசியத்தை கண்டுகொண்ட தாய்.. ஆத்திரத்தில் 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்!!

 

அமெரிக்காவில் தாயின் கழுத்தில் 30-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த மகளின் குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவை எட்டியுள்ளது. தாயை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட மகள் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. நாளை மறுநாள் (செப். 28) தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது.

50 வயதாகும் தாய் பிரெண்டா பவலை கொடூரமாக கொன்றதாக அவரது மகள் சிட்னி பவல் (23) என்ற கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரெண்டா பவல் சடலமும், பெற்ற மகளே தாயை குத்திக்கொன்றதும் அமெரிக்காவை அதிர வைத்தது.

கல்லூரி மாணவியான சிட்னி பவல் பல்கலைக்கழக நடத்தைகளை மீறியதாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தனது தாய்க்கு தெரியாமல் சிட்னி மறைத்து வைத்திருந்தார். எனினும் தாய் பிரெண்டா கண்டுகொண்டதோடு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரிக்கவும் முன்வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகள் சிட்னி தாயை கொல்ல முடிவு செய்தார்.

முடிவு எடுத்த வேகத்தில் சிட்னி, தன் கையில் கிடைத்த இரும்பு வாணலியால் தாயின் தலையில் தாக்கி அவரை நிலைகுலையச் செய்தார். அடுத்து சமையலறை கத்தியை ஏந்தியவர், தாயின் கழுத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட குத்துகளை குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பிரெண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து ஓஹியோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது சிட்னிக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2 நாளில் தண்டனை உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது.