இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு.. சிகாகோ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

 

தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் என்று சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப்டம்பர் 14-ம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, “திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன், ஆனால் வரவேற்பு லேட்டஸ்ட் ஆக உள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.