டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸில் கைது.. பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்!

 

டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக அளவில் மிகவும் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக உள்ளது டெலிகிராம். இந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (39) பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் பாரீசுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து அவரை அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நோக்கி சென்ற நிலையில், பிரான்ஸ் நாட்டு நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு பிரான்ஸ் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்‌. 

ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வருகிறார். அங்கு டெலிகிராம் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. பாவெல் துரோவ், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார். பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் ஆகியோர் கடந்த 2013-ல் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராமை நிறுவினர். டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுள்ளது.

டெலிகிராம், பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன. இணையத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பயனர்களின் தகவல் விவரங்களை அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான் தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.