டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி.. அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுமாம்!

 

டீ அடிக்கடி குடிப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படும் என சீனாவின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி... தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல் படுத்திவிடும்.

அத்தகைய தேநீர் குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டீ அடிக்கடி குடிப்பவர்களுக்கு அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் பெரும்பாலானோர் க்ரீன் டீ மட்டுமே குடித்து வந்த நிலையில், தற்போது பால் கலந்த டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் சிங்வா பல்கலைக்கழகம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடையே ஆய்வுகள் நடத்தியுள்ளது. 

இதில் அடிக்கடி டீ குடிக்கும் மாணவர்களிடம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகமாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீ யில் உள்ள ‘காஃபின்’ என்ற வேதிபொருள் மனசேர்வையும், தனிமை உணர்வையும் அதிகரிக்கிறது என சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி டீ குடிப்பது குற்ற உணர்ச்சியை அதிகரிப்பத்தோடு, தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “அடிக்கடி டீ குடித்துவிட்டு திடீரென நிறுத்தினால் நிச்சயமாக மனசோர்வு அதிகரிக்கக் கூடும் என்பது உண்மைத்தான். டீ குடிப்பதால் அந்த நேரத்திற்கான ஒரு விடுதலை கிடைப்பதாக நம்மால் உணர முடியும். ஆனால் அதுவே நிரந்தரம் என்று இருந்துவிடக் கூடாது” என்கிறார்கள்.