சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு தான் பூமி திரும்புவர்.. நாசா அறிவிப்பு

 

சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் 8 மாதமாகும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்து பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்து வருகின்றது. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஜூன் 7-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.

இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புமாம். ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும். ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும்.