அதிசயம் ஆனால் உண்மை.. சவூதி அரேபியாவில் கொட்டிய பனிப்பொழிவு.. வைரலாகும் வீடியோ!
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. இந்த பிராந்தியத்தில் எப்போதுமே வெப்பம் அதிகமாகவே இருக்கும். இங்கு சர்வ சாதாரணமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். குறிப்பாகக் கடந்த 2010-ல் ஒரு சமயம் 125 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூட பதிவானது. உலகிலேயே அதீத வெப்பமான நாடுகளில் ஒன்றாகச் சவுதி இருக்கிறது. மழை கூட ஆண்டுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பெய்யும்.
சவுதி அரேபியாவில் இரவு நேரங்களில் கடும் குளிர் வீசினாலும், இதுவரை பனிப்பொழிவு என்பது அந்த நாட்டு வரலாற்றில் நிகழ்ந்ததே கிடையாது. ஆனால், சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. எப்போதும் வறண்ட வானிலையே நிலவும் இந்த பாலைவன பகுதியில் முதல்முறையாக பனிப் பொழிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு இதுவே முதல்முறை என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த சில காலமாகவே இந்த பிராந்தியத்தில் வானிலை மொத்தமாக மாறி வருகிறது. கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை ஏற்கனவே அங்குப் பெய்த நிலையில், இப்போது முதல்முறையாகப் பனிப்பொழிவும் நடந்துள்ளது.
பனிப்பொழிவு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. அரேபிய கடலில் இருந்து உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த திடீர் வானிலை மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஈரப்பதம் நிறைந்த காற்றை வறண்ட பகுதிக்குள் கொண்டு வந்துள்ளது இதன் காரணமாகவே கனமழையும் பனிப்பொழிவும் ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சவுதி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.