ஆப்கன் மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை.. தொழுகையின்போது நடந்த பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம் கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) இரவு வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். கொல்லப்பட்டவர்களில் மசூதியின் இமாமும் ஒருவர் என தகவல் வெளியாகி உள்ளது. ஷியா முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலமான இந்த மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உள்துறை மந்திரியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் குவானி தெரிவித்தார். இந்த தாக்குதலை முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து தலிபான் அதிகாரிகள் கூறியபோது, ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்திலுள்ள மசூதியில் திங்கள்கிழமை இரவு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.
ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு முக்கிய போட்டியாக உள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை அடிக்கடி குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.