வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு.. 7 சிறுவர்கள் காயம்.. அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

 

அமெரிக்காவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு துப்பாக்கியால் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 வயது வரை இருக்கும் என்றும் பெருநகர காவல்துறை துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்தனர். காயடைந்தவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இளைஞர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு துப்பாக்கியால் தீர்வு காணும் சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

தாக்குதலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.  தாக்குதல் தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.