கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி.. அமெரிக்காவில் தொடரும் சோகம்!!

 

அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அப்போது கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 


இந்த சம்பவம் குறித்து பால்டிமோர் மேயர் பிராண்டன் ஸ்காட் கூறுகையில், “பொறுப்பற்ற மற்றும் கோழைத்தனமான செயல், இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் மற்றும் 2 பேரின் உயிரைப் பறித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.