முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. வெளியான அதிர்ச்சி வீடியோ

 

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) களமிறங்கியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூட்டில் டொனால்டு டிரம்ப் காதில் காயம் ஏற்பட்டது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.