மெக்சிகோவில் பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு.. 6 பேர் பரிதாப பலி.. 26 பேர் காயம்

 

மெக்சிகோவில் பிறந்த நாள் பார்ட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் சோனோரா மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. 15 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பலரும் உற்சாகமாக பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார். 26 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதல் கட்ட விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் குரூப் ஒன்றின் தலைவர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவரை டார்கெட் செய்து இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு அந்நாட்டை அதிரவைத்துள்ளது.

மெக்சிகோவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடைபெறுவது அதிகரித்து உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 4.20 லட்சம் பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 17-ம் தேதி கிறிஸ்துமஸ் பார்ட்டியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் மத்திய மாகாணமான குவானாஜுவாடோவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே மீண்டும் அந்நாட்டை துப்பாக்கிச்சூடு அதிர வைத்து இருக்கிறது.