அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு.. பெண் உள்பட 4 பேர் பலி!!

 

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவுக்கு தெற்கே 35 மைல்கள் தொலைவில் உள்ள ஹாம்ப்டன் நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தி நியூயார்க் டைம்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் அடங்குவர் என ஹாம்ப்டன் நகர காவல் தலைவர் ஜேம்ஸ் டர்னர் கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில், ஆண்ட்ரி லாங்மோர் (40) என்பவர் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அவருக்கு எதிராக நான்கு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனினும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை. அவருக்கு உயிரிழந்தவர்களை பற்றி முன்பே நன்றாக தெரியுமா? என்பது கூட தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லாங்மோரை கைது செய்வதற்கான தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.2 லட்சம்) பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.