அதிர்ச்சி வீடியோ.. பெரும் தீ விபத்து.. 100 பேர் பலி.. சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!!

 

ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் வடக்கே நையன்வே மாகாணத்தில் உள்ள ஹமதன்யா பகுதியில் திருமண விருந்து நடைபெற்று உள்ளது. தலைநகர் பாக்தாத்தின் வடமேற்கு பகுதியில் 335 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகரன் அடுத்து இந்த திருமண விருந்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருமண மண்டபத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த தீ விபத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் சிக்கிக் கொண்டதாகவும், 100 பேர் வரை உயிரிழந்து இருக்கக் கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோர தீ விபத்தில் சிக்கிய 150க்கும் மேற்பட்டவர்கள் மாகாணத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

100-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு நிச்சயம் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தின் போது திருமண மண்டபத்தின் சுற்றுப்புற சுவர்கள் இடிந்து விழுந்ததே இந்த மோசமான உயிரிழப்பிற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருமண மண்டபத்தின் சுற்று சுவர்கள் எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதும் சுவர்களில் பரவி, இடிந்து பொது மக்கள் விழுந்ததாகவும் அதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.  

இது குறித்து பேசிய ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை பாதிக்கப்படவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், திருமண மண்டபத்தின் உரிமையாளர் உட்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.