நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.. பள்ளி சிறுமிகளுக்கு விஷம்.. 80 மாணவிகள் மருத்துமவனையில் அனுமதி!!

 

ஆப்கானிஸ்தானில் இரு வேறு பள்ளிகளில் விஷம் வைத்ததில் 1 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட பெண் குழந்தைகள், அங்கே 2 வருடங்களுக்கு மேலாகவே ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.

இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

கல்வித்துறை விசாரணையை தொடங்கி நடத்தி உள்ளது. இதில், 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார். எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது. 

அண்டை நாடான ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் இதனுடன் நினைவு கூரப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டனர். எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாரென்ற விவரங்களை பற்றிய எந்தவித தகவலும் வெளிவரவில்லை. எந்த வகை ரசாயனம், தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிய வரவில்லை.