அதிர்ச்சி! தோண்ட தோண்ட எலும்புகள்.. பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு!

 

இலங்கையின் முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாட்டின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்ளும் வகையில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டியுள்ளார்கள்.

அப்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கொக்கிளாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றன. பெண்களின் மேலாடை  பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன. 

இதுகுறித்து வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறுகையில், இங்கு ஒன்றோ அல்லது இரண்டோ இல்லை, அதைவிடக் கூடுதலாகக் காண முடிந்தது. இந்த புதை குழி காணப்பட்டவுடன் கொக்கிளாய் காவல் நிலையப் பொறுப்பதிகாரி தனக்குத் தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக தான் அங்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொக்கிளாய் போலீசாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. அந்த இடத்தை பார்வையிட நான் அனுமதிக்கப்பட்டேன். அங்கு உடைகளின் சில பகுதிகளும், எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. உடைகளில் பெண்களின் ஆடைகளும் இருந்தன. அவற்றைக் காணும்போது அவை விடுதலைப் புலிகளுடையதாக இருக்கக் கூடும் என எனக்குத் தோன்றுகிறது.

2-3 மீட்டர் அளவிலான பகுதியில் அந்த உடல் எச்சங்கள் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டமை போலத் தெரிகிறது. இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனினும் இந்த இடம் ‘மாவீரர் துயிலும் இல்லம் இல்லை’ என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார்.