பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை.. அமெரிக்க மருத்துவர் மீது வழக்குப்பதிவு

 

அமெரிக்காவில் டாக்டர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை தாண்டி, பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மாசாசூசெட் மாகாணம் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் டெரிக் டாட். வாத நோய்கள் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டரான இவர், பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றினார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் நன்றாக பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். 

பின்னர் சிகிச்சை என்ற பெயரில் தேவையற்ற பரிசோதனைகள் செய்வதுடன், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பெண் நோயாளிகளுக்கு இடுப்பு மற்றும் அடிவயிறு சிகிச்சை, மார்பக பரிசோதனைகள், ஆண்களுக்கான டெஸ்டிகுலர் பரிசோதனைகள் மற்றும் மலக்குடல் பரிசோதனைகள் என பரிசோதனைகளை செய்யவைத்து, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். 

2010-ல் இருந்தே டாக்டர் டாட் நோயாளிகளிடம் இவ்வாறு தவறாக நடந்துள்ளார். ஆரம்பத்தில் நோயாளிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக பெண்களுக்கு தேவையற்ற இந்த பரிசோதனைகளை செய்ய வைத்து, வாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்று உடல் பாகங்களை தொட்டு தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டதால் ஒவ்வொருவராக வெளியில் பேச ஆரம்பித்தனர். 

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. டாக்டர் டாட்டிடம் சிகிச்சை பெற்ற பெண் நோயாளிகள் பலர், தகாத பாலியல் தொடுதல் பற்றிய குற்றச்சாட்டுகளை கூறினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. 

நோயாளிகளின் உறவினர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பரிசோதனைகளை செய்யக்கூடாது என டாக்டர் டாட்டுக்கு உத்தரவிடப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு ஜூன் மாதம் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்ட அவர், ஒரு மாதத்திற்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், சார்லஸ் ரிவர் மெடிக்கல் அசோசியேட்சில் தனது தனிப்பட்ட மருத்துவப் பயிற்சியை விட்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டாக்டர் டாட் மீது மாசாசூசெட்ஸ் சபோக் சுப்பீரியர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி சிறுமிகள் முதல் 60 வயது பெண்கள் வரை டாக்டர் டாட் தனது கைவரிசையை காட்டியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தவிர, மருத்துவமனையின் சில ஊழியர்கள் மற்றும் சார்லஸ் ரிவர் மெடிக்கல் அசோசியேட்ஸ் ஊழியர்கள் சிலரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டரின் பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிந்தும் தடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.