சாலை விபத்தில் 7 வெளிநாட்டு தன்னார்வ ஆசிரியர்கள் உள்பட 25 பேர் பலி.. தான்சானியாவில் சோகம்!

 

தான்சானியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 ஆசிரியர்கள்  உள்பட 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரக்கா நாடான தான்சானியாவின் வடக்கு பகுதியில் அருஷா நகரம் அமைந்துள்ளது. இங்கு உள்ள பள்ளியில் கென்யா, டோகோ, மடகாஸ்கர், புர்கினா பாசோ, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் இருந்து தலா ஒரு தன்னார்வ ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் வேலை முடிந்து நேற்று முன்தினம் டிரக்கில் வீட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அருஷாவில் உள்ள ஞகரம்தோனி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 3 வாகனங்கள் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 வெளிநாட்டு தன்னார்வ ஆசிரியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரக் ஓட்டுநரை விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தான்சானிய அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களை வழக்கமான ஆய்வு மற்றும் ஓட்டுநர்களுக்கான உரிமக் கட்டுப்பாடு உட்பட சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.