அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) அறிவிக்கப்பட்டார்.
ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த ஜோ பைடன், அதற்கான அறிவிப்பையும் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.