ஓனரை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்.. வைரல் வீடியோ!

 

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின்போது பிரபல யூடியூபரை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் பிரபல அமெரிக்க யூடியூபர் (டாரன் ஜாசன்), சமீபத்தில் 1 லட்சம் டாலருக்கு (ரூ.84 லட்சம்) ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கினார். அதை நேரடியாக ஆன்லைன் வீடியோவில் பரிசோதித்துப் பார்த்தார். முதலில் ரோபோ நாய்க்கு அவர் கைகொடுக்கிறார், நாயும் முன்னங்காலை தூக்கி கைகொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடிக்கிறார். நாயும் துள்ளிக்குதித்தது. 

பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டு உள்ள துப்பாக்கி பொத்தானை ஆன் செய்துவிட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்து சுடத் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி யூடியூபரை தாக்கியது. 

இதை எதிர்பாராத அவர் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்தார். அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தது. ஒருவழியாக அதன் பார்வையில் இருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்திய பிறகுதான் ரோபோநாய் சுடுவதை நிறுத்தியது. 

அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார். நேரலையாக வெளியான இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வலைத்தளவாசிகள் இது நடிப்பு என ரசித்துப் பார்த்ததுடன், வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டனர். வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர்.