சிறையில் கலவரம்.. 41 பெண் கைதிகள் எரித்து கொலை.. ஹோண்டுராஸ் கொடூரம்!
ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது.
சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.
இது தொடர்பாக ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறும்போது, “சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஜூலிஸ்சா வில்லானுவா கூறுகையில், உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். நாட்டின் சட்ட திட்டம் ஆனது, திட்டமிடப்பட்ட குற்றங்களால் கடத்தி செல்லப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அதில், ஆண்கள் மட்டுமே உள்ள சிறைகளில் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.