பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி!
பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இன்று குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்தபோது அந்த குடியிருப்பில் 11 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்ச படுகிறது. பின்னர் இந்த சம்வபம் குறித்து விசாரணை நடத்தினர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.