தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ

 

பிரேசிலில் தண்டவாளம் அருகே ரீல்ஸ் செய்ய முயன்ற பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் மூழ்கி இருக்கின்றனர். லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது.

அதுபோன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயன்று நூலிழையில் உயிர்தப்பிய காட்சி உள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது நண்பருடன் தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு ரீல்ஸ் செய்வதற்காக தயாராகும் காட்சிகள் உள்ளது.

அப்போது பின்னால் தண்டவாளத்தில் ரயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அந்த பெண் ரீல்ஸ் உருவாக்குவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ரயில் அந்த பெண்ணின் பக்கத்தில் வந்த போது ரயில் என்ஜின் டிரைவர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து தள்ளினார். இதனால் அந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.


இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில் என்ஜின் டிரைவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் ரீல்ஸ் வீடியோ தயாரித்த பெண்ணையும், அவரது நண்பரையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.