வங்கதேச நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சூறையாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.. வைரலான வீடியோ!
வங்கதேசத்தில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தன. வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சூழலில், இன்றும் அந்நாட்டின் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வங்கதேசத்தின் டாக்கா நகரில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் வெளியேறினார். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் இன்று புகுந்தனர். அவர்களில் சிலர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.