புரோட்டீன் ஷேக்.. இந்திய வம்சாவளி சிறுவன் உயிரிழப்பு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன், புரோட்டீன் ஷேக் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் மாவட்டத்தில் வசித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோஹன் கோதானியா என்ற 16 வயது சிறுவன், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று புரோட்டீன் ஷேக் குடித்ததால் நோய்வாய்ப்பட்டார். பின்னர் வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு மீள முடியாத மூளை பாதிப்பு (Irreversible Brain Damage) இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. ஏனெனில் அவரது உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில் ரோஹனின் மரணம் குறித்து மில்டன் கெய்ன்ஸ் கரோனர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது என்றும், இந்த பாதிப்பால் சிறுவன் உயிரிழக்க நேரிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், தன் மகன் மிகவும் மெலிந்து காணப்பட்டு இருந்ததால், அவரின் தசைகளை வளர்க்க உதவும் புரோட்டீன் ஷேக் வாங்கிக் கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த புரோட்டீன் ஷேக் Ornithine Transcarbamylase (OTC) குறைபாடு எனப்படும் அரிய மரபணு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இது ரோஹனின் ரத்த ஓட்டத்தில் அமோனியாவின் முறிவைத் தூண்டி ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு, கடைகளில் விற்கப்படும் புரோட்டீன் ஷேக்குகளில் உயிர் காக்கும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் சேர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் மூத்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணையில் பேசிய ரோஹனின் தந்தை, “நான் தசைகளை வளர்ப்பதற்காகத்தான் இதை வாங்கினேன். என் மகன் மிகவும் ஒல்லியாக இருந்தார். அவரை சாப்பிடச் சொல்லி நச்சரிப்பதைவிட, இதுபோன்ற ஷேக் மூலம் அவரின் தசைகளை வளர்த்தால் சற்று நன்றாக இருப்பார் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை” என துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.