பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. ரூ.90 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நாளை (ஜூலை 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பாஸ்டீல் தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு பாரீஸ் விமான நிலையத்தில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஒப்புதல் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி அப்படியே ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அதாவது ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் சாயீத் அல்நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார்.