சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பப்புவா நியூ கினியா! மக்கள் பீதி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.
தென்மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் புவியியல் அமைப்பு கொண்ட இடத்தில் பப்புவா நியூ கினியா நாடு அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும், அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்திவிடுகிறது.
அந்த வகையில், பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் தெரிவித்து உள்ளது.