பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 ஆக பதிவு! மக்கள் அச்சம்

 

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

துருக்கி நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. பனமா மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம், “பனாமா-கொலம்பியா எல்லையில் கரிபீயன் கடலில் 6.6 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.” என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.