ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவு

 

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஜப்பானில் புத்தாண்டு நாளில் இஷிகாவா, மேற்கு கடற்கரை பகுதியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சுனாமி அலைகளும் தாக்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 161 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பதும் தெரியவில்லை. நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதனிடையே ஜப்பானில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் 1214 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிசக்தி வாய்ந்த் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படும் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்க சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஒரு வாரத்தில் ஜப்பானில் 1215வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.