போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி! வெற்றிகரமாக முடிந்த குடல் அறுவை சிகிச்சை!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க மதத் தலைவராக 86 வயது போப் பிரான்சிஸ் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாடிகன் நகரில் வசித்து வரும் இவருக்கு, அடிக்கடி உடல் நல பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 2021-ல் ஜூலை 4ம் தேதி போப் பிரான்சிற்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்த போப் பிரான்சிஸ் அதன்பிறகு தனது பணியை தொடங்கி செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் போப் பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சுவாசப் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார். இதற்கான சிகிச்சையை 4 நாட்கள் போப் மருத்துவமனையில் தங்கி பெற்றார். அதன்பிறகு ஏப்ரல் 1ல் டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்நிலையில் நேற்று காலையில் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சமீபகாலமாக வயிற்றில் அடிக்கடி தாங்க முடியாத வலி ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து 3 மணிநேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை பிரச்சனைகள் ஏதுமின்றி வெற்றிக்கரமாக முடிந்தது.
தற்போதைய அறுவை சிகிச்சையில் போப் ஆண்டவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அதன்பிறகு ஓய்வுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோலி சீ பிரஸ் அலுவலகம் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.