எரிமலை முன் புகைப்படம்.. தவறி விழுந்து இளம்பெண் பலி.. கணவர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்

 

இந்தோனேசியாவில் எரிமலை முன் புகைப்படம் எடுத்த இளம்பெண் ஏரிமலைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த தம்பதி ஹுவாங் லிஹோங் (31) மற்றும் அவருடைய கணவர் ஜாங் யாங். இவர்கள் இருவரும் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலை பகுதிக்கு சென்றனர். இது பார்ப்பதற்கு நீல வண்ணத்தில் காட்சி தரும். அதில், ஈர்க்கப்பட்டு இந்த தம்பதி எரிமலை அருகே சென்றது. 

அப்போது, லிஹோங் புகைப்படம் ஒன்றை எடுக்க விரும்பியுள்ளார். அப்போது, அவர் திடீரென தவறி மலையின் 246 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்து விட்டார். முதலில், எரிமலையின் முனை பகுதியில் 8 அல்லது 9 அடி தொலைவிலேயே பாதுகாப்பாக லிஹோங் நின்றிருக்கிறார்.  அதன்பின்பு, புகைப்படத்தின் பின்னணி நன்றாக இருக்க வேண்டும் என நெருங்கி சென்றிருக்கிறார். 

அவருடைய கணவர் புகைப்படம் எடுத்தபடி இருந்திருக்கிறார். இதில், லிஹோங்கின் ஆடை காற்று வேகத்தில் இழுத்ததில், கவனக்குறைவாக பின்னால் சென்றுள்ளார். இந்த தவறான செயலால், அவர் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்து உள்ளார். அவர்களுடைய சுற்றுலா வழிகாட்டி தொடர்ந்து எச்சரித்து வந்தபோதும், லிஹோங் தொடக்கத்தில் அதனை கேட்டு கொண்டாலும் பின்னர் கவனத்தில் கொள்ளவில்லை.  

இந்த சம்பவத்தில் 2 மணிநேர தேடுதலுக்கு பின்பு அவருடைய உடல் மீட்கப்பட்டது. அவர் மலை பகுதியில் விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி உறவினர்களிடம் அழுதபடி கூறிய லிஹோங்கின் கணவர் மருத்துவமனையில் சுவரில் பலமுறை தலையால் மோதியபடி அழுது புரண்டது சுற்றியிருந்தவர்களுக்கு ஆழ்ந்த சோகம் ஏற்படுத்தியது.  

அந்நாட்டில் உள்ள 130 துடிப்பான எரிமலைகளில் இஜென் எரிமலையும் ஒன்று. இயற்கை அதிசயங்களை கொண்ட இந்த எரிமைலையை காண்பதற்காக சுற்றுலாவாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.