சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.. அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி!

 

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தின் போல்வார்டு பகுதியில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாகாண போலீசார் உடனடியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவித்துள்ள காவல் துறையினர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.