5 ஆண்டுகளில் 17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்.. 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

 

அமெரிக்காவில் 5 ஆண்டுகளில் 17 பேரை இன்சுலின் ஊசிப் போட்டு கொலை செய்த நர்சுக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பட்லர் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டி (41). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இவர் தான் பணி புரிந்த மருத்துவமனையில் சில நோயாளிகளுக்கு வேண்டும் என்றே தவறான ஊசி போட்டு 2 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அவர் கடந்த 2018 முதல் 2023 வரை 5-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில முதியோர் காப்பகங்களிலும் அவர் பணியாற்றினார். அப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை ஊசி மூலம் அவர் செலுத்தி உள்ளார். மேலும் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு கூட அவர் அந்த ஊசியை செலுத்தி இருக்கிறார்.

இந்த இன்சுலின் மருந்தை ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக செலுத்தும்போது இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 17 பேரை அவர் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இன்சுலின் மருந்தை வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக செலுத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு சுமார் 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.