பிரபல பரதநாட்டிய கலைஞர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

 

சிங்கப்பூரின் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் ரதி கார்த்திகேசு கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 87.

சிங்கப்பூரில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான ரதி கார்த்திகேசு. சிங்கப்பூர் இந்திய பாரம்பரியத்திற்கும் மரபுடைமைக்கும் பல வழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வந்த இவர் அண்மையில் முதுகில் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் ஆகஸ்ட் 9-ம் தேதி மண்டாய் தகனச்சாலையில் தகனம் செய்யப்பட்டது.

இவரது மறைவுக்கு ஸ்ருதிலயா ஸ்கூல் ஆஃப் டான்ஸ் இயக்குநர் காயத்ரி ஸ்ரீராம் கூறுகையில், 1995-96 ஆம் ஆண்டில் கார்த்திகேசுவைச் சந்தித்ததாகவும், இருவரும் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் இருவரும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார். சிங்கப்பூரில் உள்ள இந்திய நடன சமூகத்தில் ரதி கார்த்திகேசுவின் பங்களிப்பு மற்றும் தாக்கம் அளவிட முடியாதது என்று புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

மேலும் பெண்கள், குறிப்பாக திருமணமானவர்கள், பரதநாட்டியக் காட்சியில் தொழில்முறை கலைஞர்களாக கருதப்படாத நேரத்தில் ரதி கார்த்திகேசு நடனமாடத் தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகும் நடனம் ஆடி, நம்மில் பலருக்கு அடையாளமாக மாறினார். மேலும் அவர் வாழ்க்கையில் பல தனிப்பட்ட கலைஞர்களை வளர்த்தெடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய நடன நிறுவனமான அப்சரஸ் ஆர்ட்ஸின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி கூறுகையில், “ரதி கார்த்திகேசு பல்வேறு இந்திய பாரம்பரிய கலைகள், குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன வடிவங்களைப் படித்த ஒரு மூத்த கலைஞர். அவர் சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தினார். 2007-ம் ஆண்டில், அப்போதைய தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சராக இருந்த டாக்டர் லீ பூன் யாங், பாரம்பரிய விருது வழங்கும் விழாவில் கார்த்திகேசுவின் தொண்டு முயற்சிகளை எடுத்துரைத்தார்.

A post shared by SIFAS (@wearesifas)

1950-களில் பிரபல பாரம்பரிய இந்திய நடனக் கலைஞரான திருமதி ரதி கார்த்திகேசு, சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்திற்கு நடன போஸில் அரிய இந்திய சிற்பங்களின் தொகுப்பை வழங்கியுள்ளார். அவரது பங்களிப்பு நிச்சயமாக அருங்காட்சியகத்தின் சேகரிப்பு மற்றும் கண்காட்சிகளுக்கு மிகவும் பிரகாசத்தை சேர்க்கும்” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள ஜோதி ஸ்டோர் மற்றும் ஃப்ளவர் ஷாப் உரிமையாளர் ராஜகுமார் சந்திரா, கூறுகையில், “ரதி கார்த்திகேசு மிகவும் குறிப்பிடத்தக்க, வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்மணி, மேலும் கோவில்களுக்கு தொடர்ந்து உணவு நன்கொடைகள் செய்யும் பக்தியுள்ள பெண்மனி” என்று தெரிவித்துள்ளார்.